சுமதி ஆசிரியர் | Sumathy Teacher | பாகம் 1




     இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற அழகிய கிராமத்தில் வீரன்குடிகாடு என்னும் சிற்றூரில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி பக்கிரிசாமி, நாகம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.

     இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உடன் பிறந்தவர்கள் ஆவார்கள். இரண்டு சகோதரர்களும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்கள். மூத்த பெண்ணாக குடும்பத்தில் செல்லமாக வளர்ந்து வந்தார். 

      இந்த நிலையில் தந்தை மலேசியா சென்றவர் திரும்ப வரவில்லை. பாதுகாப்புக்காக தாயார் குழந்தைகளோடு தாத்தா வீட்டுக்கு சென்று அந்த குடும்பத்தில் ஐக்கியமாகினர். தாயார் தான் மூத்த பெண். சிறுவயதிலேயே திருமணம் ஆனதால் மாமன்கள் சித்திகள் சிறு வயதுகாரர்களாக இருந்தனர். ஆதலால் மாமன்கள் அண்ணன்கள் ஆகினர் சித்திகள் சகோதரிகளாகினர். நாளடைவில் அதுவே உறவாக நிலைத்தது. தாத்தா காயாரோகணம் ஊரில் செல்வந்தராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார். பரவை சந்தைக்கு காய்கறிகளை உற்பத்தி செய்து அனுப்பி வைத்து வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்தார்.

     சுமதி பள்ளி படிப்பை தெற்கு பொய்கைநல்லூரில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் பயின்றார். முதல் வகுப்பில் படிக்கும் போது பள்ளிக்கு செல்ல ஆர்வம் இல்லாதவராக இருந்தார். பள்ளியில் யாருக்கும் தெரியாமல் வெளியேறி வீட்டிற்கு சென்று மாடியில் படுத்து தூங்கிய நாள்கள் அதிகம்.  நாளடைவில் பள்ளிக்கு ஆர்வமுடன் செல்லவும் படிக்கவும் ஆரம்பித்தார். பின்பு மேல்நிலைக் கல்வியை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தார். 

         காய்கறி தோட்டத்தில் தாயார், தாத்தா, பாட்டி, சித்திகள், அண்ணன்கள் வேலை செய்வதைப் பார்த்து தானும் பள்ளி நாள்களில் காலையிலும் மாலையிலும் மற்றும் விடுமுறை நாள்களிலும் சிறுசிறு வேலைகளை செய்து உதவி செய்வார். சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வம் உடையவராகவும் துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். 

       வீட்டிற்கு அருகிலுள்ள கடலில் சோழி எடுத்து விளையாடுவது, பல்லாங்குழி விளையாடுவது, காய்கறிகளை பறிப்பது, புத்தகம் படிப்பதில் ஆர்வம், மழை நீரில் கப்பல் விடுவது இவரது பொழுதுபோக்காக இருந்தது. ஒருமுறை முந்திரி பறிக்கச் சென்று அங்கே தோழிகளுடன் பல்லாங்குழி விளையாடி மதிய உணவை மறந்து பிறகு வீட்டில் அடி வாங்கியது அவருக்கு மறக்க முடியாத அனுபவம் . 

        தான் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் 1989 ஆம் ஆண்டு மன்னார்குடியில் ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்பள்ளிக்கு முறையான அரசு அங்கீகாரம் அன்றைய திமுக அரசு வழங்காததால் படிப்பு சான்றிதழ் கிடைக்காமல் போனது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் படிக்கும் வாய்ப்பு 2001 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் வழங்கப்பட்டது. எனவே 2002 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்து படித்தார். 2004 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்று அரசு வழங்கிய ஆசிரியர் பட்டயச் சான்றிதழ் வாங்கினார். 


   அவருக்கு திருமண செய்ய பெரியோர்கள் எண்ணினர். அவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் வரன் ஒன்று இருப்பதாக தெரிவித்தார். அவரும் சுமதி போன்றே பாதிக்கப்பட்டு  திருவாரூர் மாவட்டம்   மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர் தான் என்ற செய்தியை கூறினார். 
 
        நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு குட்டியாப்பிள்ளை கட்டளையில் வசிக்கும் வைரப்பன், இராசலெட்சுமி தம்பதியருக்கு மகனாக  பிறந்தவர் தமிழ்மணி. தமிழ்மணியின் தங்கை வனஜா. இவர் ஒரு ஆசிரியர். இவரின் கணவரான வள்ளிமணாளன் மூலம் இரு வீட்டார் சம்மதத்துடன் பெண் வீடு மாப்பிள்ளை வீடு பார்க்கும் படலம் முடிந்தது. தமிழ்மணி தான் மாப்பிள்ளை என்று இருவீட்டாரும் பேசி முடிவு செய்தனர்.



      இந்த நிலையில் தனது அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் திருமணத்தை உடனடியாக முடிக்க எண்ணினார் தமிழ்மணி. இதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திருமணத்திற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. மூன்றே நாள்களில் சில உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டு எளிமையாக சீரும் சிறப்புமாக மருதூர் மகா மாரியம்மன் கோவிலில் 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 ஆம்  தேதி திருமணம் இனிதே நிகழ்ந்தது.


       ஒரு வாரத்தில் தமிழ்மணியின் அப்பா இறந்து விடுகிறார். அதனால் தனக்கு அவப்பெயர் வந்து விடுமோ என பயந்தார் சுமதி. ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார் கணவரான தமிழ்மணி. கணவர் மீது அவருக்கு நல்ல நம்பிக்கையும் புரிந்துணர்வும் ஏற்பட்டது. இவ்வாறு சுமதியின் இல்லற வாழ்க்கை பயணம் தொடங்கியது.  

    மருதூர் வடக்கு இராசாபுரம் தேனீ நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியர் பணி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பயிற்சி முடித்ததால் ஆசிரியர் மாணவர் உடனான அனுபவம் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தில் கணவன் மனைவி இருவரும் தலா 500 ரூபாய் மாத ஊதியத்திற்கு அப்பணியில் சேர்ந்தார்கள். கணவர் மனைவி இருவரும் ஒரே மிதிவண்டியில் பள்ளிக்கு சென்று வந்தார்கள். அந்த மிதிவண்டி பயணம் அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் புது அனுபவமாகவும் இருந்தது. மாணவர்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கும் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்தது. 

     புதுமண தம்பதிகள் அல்லவா? சுமதி கற்பமானார். ஆனாலும்கூட கற்பவதியாக ஏழாவது மாதம் வரை பள்ளிக்கு சென்று வந்தார். 2006 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சுவீந்தர் என்று பெயர் சூட்டி  மகிழ்ந்தார்கள். குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள். 


      ஆசிரியர் பயிற்சி முடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம்  தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பாக்கம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.


தொடரும் ....

அடுத்து ....
       கணவர் மீது அதீத நம்பிக்கையும் தீராத காதலுடனும் இருந்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எப்போதும் கலகலப்பாக இருக்கக் கூடியவர். அவரது பேச்சும் செயலும் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் தரும் அளவிற்கு இருக்கும். அனைவரிடம் எப்பொழுதும் புன்னகையுடன் பேசும் குணம் உடையவர். மாணவர்களிடம் மிகவும் அக்கறை கொண்டு சிறப்பாக கற்பித்தல் பணியை ஆர்வமுடன் செய்வார். மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை கூறி நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார். மாணவர்களும் இவரிடம் மிகுந்த மரியாதையுடனும் பாசத்துடனும் இருந்தனர். இவருக்கு  மாணவ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு உதவிகள் செய்வார்கள். இவருடன் பணிபுரிந்த தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் இவரை அன்பாகவும் கருணை உள்ளத்தோடும் கவனித்துக் கொண்டார்கள். இவர் ஏழைகள் மற்றும் எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற இளகிய மனம் படைத்தவர். இத்தகைய நல்ல ஆசிரியருக்கு பெருந்துயரம் ஒன்று ஏற்பட்டது. அது  விரைவில் ....

இரண்டாம் பாகம் கீழே லிங்கை தொடவும் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அனுபவம் தந்த பாடம்